விமானப் பயணத்தின் போது இருக்கைகளைத் தேர்வு செய்வதற்கு  தனியார் விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

விமானங்களில் விருப்பமான இருக்கைகளைத் தேர்வு செய்யும்போது, ‘சீட் செலக்சன் கட்டணம்’ என்ற பெயரில் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தீவிரமாகப் பரிசீலித்த மத்திய அரசு, இனி ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60 சதவீத இருக்கைகளை எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு இருக்கைக்காகப் பயணிகள் கூடுதல் பணம் செலவழிப்பது தவிர்க்கப்படும்.

குடும்பமாகவோ அல்லது நண்பர்களுடனோ ஒரே ‘பிஎன்ஆர்’ (PNR) எண்ணில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, அவர்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் அமர வைக்கக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரே பதிவில் வரும் பயணிகளுக்கு அருகருகே இருக்கைகளை வழங்குவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இது குடும்பத்துடன் பயணிப்போருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

பயணிகள் கொண்டு வரும் விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதில் வெளிப்படையான மற்றும் எளிமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விமானங்களில் செல்லப்பிராணிகளை (Pets) அழைத்துச் செல்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அந்தந்த நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானங்கள் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது அல்லது போர்டிங் மறுக்கப்படுவது போன்ற சூழல்களில் பயணிகளுக்குக் கிடைக்கும் இழப்பீடு மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை விமான நிறுவனங்கள் தங்களது இணையதளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் விமான நிலைய கவுண்ட்டர்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மிக முக்கியமாக, இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தந்த மாநிலப் பிராந்திய மொழிகளிலும்) இருக்க வேண்டும் என மத்திய அரசு கறாராகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குறைந்த விலையில் உணவு வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ மற்றும் இலவச வை-ஃபை வசதிகளைத் தொடர்ந்து, தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை விமானப் பயணத்தை மேலும் எளிய மக்களுக்கானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.