மத்தியப் பிரதேச மாநிலத்தில் வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடும் கும்பல், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் குறிவைத்துத் திருடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் வசிப்பவர் நீது ரஜாவத். இவரது பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், சமையலறையில் இருந்த சிலிண்டரையும் தூக்கிச் சென்றுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by NDTV India (@ndtvindia)

இதேபோல், தலைநகர் போபாலில் உள்ள ஒரு வழக்கறிஞரின் வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த 4 காலி சிலிண்டர்களை, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் சிலிண்டர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 1.76 கோடிக்கும் அதிகமான எல்பிஜி (LPG) நுகர்வோர் உள்ளனர். சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் கறுப்புச் சந்தையைத் தடுக்க முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் மற்றும் உணவுத் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தட்டுப்பாட்டைப் போக்க எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சந்தையில் கூடுதலாக 1.2 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 1,116 இடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட 1,825 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது பல இடங்களில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.