விமானப் பயணத்தின் போது தனது சிறு குழந்தை அழக்கூடும் என்பதால், சக பயணிகளிடம் முன்கூட்டியே அனுமதி மற்றும் மன்னிப்பு கோரிய தந்தையின் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்வது பெற்றோருக்கு எப்போதும் ஒரு சவாலான காரியம். குழந்தை அழுதால் சக பயணிகள் எரிச்சலடைவார்களோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். இந்நிலையில், ஒரு தந்தை விமானம் புறப்படுவதற்கு முன்பே எழுந்து நின்று சக பயணிகளிடம் பேசினார்.

அவர் கூறுகையில், “குழந்தைகள் இல்லாதவர்களுக்கு, சிறு குழந்தைகள் ஏன் காரணமே இல்லாமல் அழுகிறார்கள் அல்லது அடம் பிடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். எனது குழந்தை பயணத்தின் போது அழுதால் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் அவள் அடம் பிடிக்க வாய்ப்புள்ளது, அதற்கு முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று மிகுந்த பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. அந்தத் தந்தை தனது பதிவில், “ஒரு பெற்றோராக எனது ஆளுமையையே நான் மாற்றிக்கொண்டேன். முன்கூட்டியே பேசி புரிய வைப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தந்தையின் செயலுக்கு இணையவாசிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்துள்ளன:.

 

சக மனிதர்கள் மீதான அக்கறையும், பொறுப்புணர்வும் அந்தத் தந்தையிடம் தெரிகிறது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் மற்றவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் கண்டுகொள்வதே இல்லை. இவரைப் பாராட்டியே ஆக வேண்டும்,” என ஒரு தரப்பினர் புகழ்கின்றனர். இருப்பினும் விமானம் என்பது ஒரு பொதுவான இடம். அங்கு குழந்தைகள் அழுவது இயல்பானது. இதற்கு எதற்காக ஒரு தந்தை மற்றவர்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்? இது தேவையற்றது,” என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். “மற்றவர்கள் ஏன் உங்கள் குழந்தையின் அழுகையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?” எனச் சிலர் காட்டமாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் “பெற்றோர்களின் பொறுப்பு” மற்றும் “பொது இடத்தில குழந்தைகளின் சுதந்திரம்” குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.