ஐபிஎல் 2026 சீசன் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆகியோர் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அண்மையில் நடந்த டி20 உலகக் கோப்பையைத் தவறவிட்ட இவர்கள், இன்னும் முழுமையாகக் குணமடையாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக, ஆர்சிபி அணி கடந்த முறை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஹேசில்வுட் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேபோல், ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கம்மின்ஸ் வராததால், அந்த அணி தற்காலிக கேப்டனைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.

முதுகு வலி மற்றும் இதர காயங்களால் அவதிப்படும் இவர்களை, வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள முக்கியமான சர்வதேச தொடர்களுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

2027 உலகக் கோப்பை மற்றும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இவர்களின் பங்களிப்பு அவசியம் என்பதால், ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளனர்.