நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ், மைதானத்தில் சிறுத்தையைப் போன்ற தனது அசாத்தியமான ஃபீல்டிங் திறமையால் உலகப் புகழ்பெற்றவர். தற்போது அவர் வானிலும் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பிலிப்ஸ் ஒரு சிறிய ரக விமானத்தை ஆக்லாந்து நகருக்கு மேலே இயக்கி, அதனை மிகத் துல்லியமாக தரையிறக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் சிறுவயது முதலே விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட பிலிப்ஸ், தற்போது இதற்கான முறையான உரிமத்தைப் பெற்று ஒரு தேர்ந்த ‘பைலட்’ ஆக மாறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் களத்தில் பறந்து வந்து கேட்ச் பிடிக்கும் இவரது வேகத்தைப் பார்த்து ரசிகர்கள் இவரை ‘சூப்பர்மேன்’ என்று அழைப்பதுண்டு.
Glenn Phillips flying & landing aircraft in Auckland🛩️ pic.twitter.com/BJ2ZAMO4by
— Rajiv (@Rajiv1841) March 18, 2026
“>
தற்போது நிஜமாகவே வானில் பறக்கும் பிலிப்ஸ், ஒருவேளை தான் கிரிக்கெட் வீரராக வரவில்லை என்றால் நிச்சயம் ஒரு விமானியாகவே இருந்திருப்பேன் என்று தனது தீராத ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த காலக்கட்டத்தில், மிகத் தீவிரமாகப் படித்து தனது விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார். கிரிக்கெட், பேட்டிங், பந்துவீச்சு என சகல துறைகளிலும் ஜொலிக்கும் கிளென் பிலிப்ஸின் இந்த புதிய பரிணாமம், “இவரால் முடியாதது எதுவுமே இல்லை” என ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
