2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பட்ட விவகாரத்தில், தாம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த ஆத்திரத்தில் அர்ஷ்தீப் சிங் பந்தை வேகமாக எறிய, அது மிட்செல் மீது பட்டது.

இதனால் ஆ மைதானத்தில் ரசிகர்கள் கூச்சலிட்டனர். ஒரு கேப்டனாக மைதானத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால், அர்ஷ்தீப் வேண்டுமென்றே செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்காக மன்னிப்பு கேட்பதாக மிட்செலிடம் கூறியதாக சூர்யகுமார் விளக்கமளித்தார். இந்தச் சம்பவத்திற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆனால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் யாரும் நண்பர்கள் கிடையாது என்று கூறிய அவர், அர்ஷ்தீப் சிங்கின் ஆக்ரோஷமான எதிர்வினைக்கு ஆதரவு தெரிவித்தார்.

நாட்டுக்காக விளையாடும்போது இதுபோன்ற தீவிரமான வேகம் இயல்பானதுதான் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கம்பீர் கூறியுள்ளார். சூர்யகுமார் மன்னிப்பு கேட்டது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், வீரர்கள் இதுபோன்ற ஆக்ரோஷத்தைக் காட்டுவதையே தாம் விரும்புவதாக கம்பீர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.