பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்காகவும், பாகிஸ்தானின் அணு ஆயுத பலத்திற்காகவும் பில்லியன் கணக்கில் கடன் வழங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது ஈரான் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் தனது படைகளை அனுப்பாமல் ஆப்கானிஸ்தான் எல்லைப் பதற்றத்தைக் காரணம் காட்டி தட்டிக் கழித்து வருகிறது.
இதனால் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் அரசு சவுதிக்கு ஆதரவு அளிப்பதாக வார்த்தை அளவில் கூறினாலும், உள்நாட்டில் இருக்கும் ஷியா-சுன்னி பிரிவினை மற்றும் ஈரானின் பகையை எதிர்கொள்ள அஞ்சி நேரடி ராணுவ உதவியைத் தவிர்க்கிறது.
நேட்டோ நாடுகளின் ஒப்பந்தத்தைப் போன்ற இந்த பாதுகாப்பு உடன்படிக்கையை பாகிஸ்தான் முறையாகப் பின்பற்றாதது, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
