ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் போர்நிறுத்த ஆலோசனைகளை அவர் நிராகரித்துள்ளார்.
தற்போது போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. பதிலுக்கு ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், எரிபொருள் சேமிப்பு கிடங்குகளும் சேதமடைந்துள்ளன.
இந்தப் போரின் விளைவாக உலக நாடுகளுக்கு 20 சதவீத எண்ணெய் விநியோகத்தைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 104 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி பெட்ரோல், டீசல் விலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பயங்கரமான பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடரும் என்று மொஜ்தபா கமெனி எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
