விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு அவர் தற்போது பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்குத் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உட்படப் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சி.வி.சண்முகத்தை வறுத்து எடுத்தனர். இந்த அழுத்தம் காரணமாக, இன்று தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள அவர், தான் எதார்த்தமாகப் பேசிய விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

​தனது விளக்கத்தில், “நான் உள்நோக்கத்தோடு நயன்தாராவைப் பற்றிப் பேசவில்லை; ஒரு வேகத்தில் பேசும்போது வாய் தவறி வார்த்தைகள் வந்துவிட்டன, அவரது பெயரைக் கூட நான் தவறாகத்தான் உச்சரித்தேன்” எனச் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேவையில்லாத சட்டச் சிக்கல்களையும், மக்கள் மத்தியிலான அதிருப்தியையும் தவிர்க்கவே அவர் இந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா குறித்துப் பேசியது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல என அவர் மழுப்பினாலும், இந்தச் விவகாரம் இன்னும் இணையத்தில் பேசுபொருளாகவே நீடிக்கிறது.