மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியைப் பன்னாட்டுச் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் கடல்வழிப் பாதையை மூடியுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் இந்தியாவுடனான நட்புறவு அடிப்படையில் நந்தா தேவி மற்றும் ஷிவாலிக் ஆகிய இரு இந்தியக் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி வழங்கியது. ஏறத்தாழ தொண்ணூற்று 2000 டன் எடையுள்ள சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த இரு கப்பல்களும் குஜராத் மாநிலத்தின் கண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களை இன்று பாதுகாப்பாக வந்தடைந்தன.

இந்த நிலையில் இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியதற்குப் பதிலாக ஈரான் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் அடையாளத்தை மறைத்துச் சட்டவிரோதப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக இந்தியாவிடம் சிக்கிய மூன்று கப்பல்களை விடுவிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜப்ஜியா உள்ளிட்ட அந்த மூன்று கப்பல்களும் தங்களுடையவை என்று ஈரான் தூதர் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவசரத் தேவைக்கான சில மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை விநியோகம் செய்யுமாறும் ஈரான் தரப்பில் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் தூதரின் இந்தச் சந்திப்பு மற்றும் கப்பல்கள் விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்பொழுது வெளியுறவுத் துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால வர்த்தகத் தொடர்புகள் மற்றும் தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் இந்தியா எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட கப்பல்கள் குறித்த விரிவான விசாரணையை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.