பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணத்தை முடித்து அவர் இந்தியா திரும்பிய உடனே, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற யூகங்கள் பரவிய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் இதற்குப் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இஸ்ரேலில் இருந்தபோதே அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும், அவர் சென்ற பிறகுதான் தாக்குதலுக்கான சூழல் அமைந்ததே தவிர, இவை திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான அமைச்சரவையின் ஒப்புதல் பிரதமர் கிளம்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பெறப்பட்டது என்று தூதர் அசார் விளக்கினார்.
இஸ்ரேல் அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரான் மீது போரைத் திணிக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக ஈரானின் உள்நாட்டு அரசியல் மாற்றத்தையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈரான் மக்கள் தங்கள் நாட்டின் கொள்கை அல்லது ஆட்சியில் மாற்றத்தைக் கோரும் வகையில் ஒரு சூழலை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும், இதன் மூலம் வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்குப் பயன் தரும் வகையில் ஒரு நிலையான மேற்காசியாவை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
