மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் முரைனா பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், கேஸ் ஏஜென்சிகளின் முன்பு பெண்கள் நடத்தும் வினோதமான போராட்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜௌரா பகுதியில் நீண்ட வரிசையில் நின்றும் சிலிண்டர் கிடைக்காத ஆத்திரத்தில் பெண் ஒருவர் திடீரென சாமி வந்தது போல் ஆடி, கத்தி கூச்சலிட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைக் கண்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு அவருக்கு முன்னுரிமை அளித்து சிலிண்டர் வழங்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
மற்றொரு வீடியோவில், சில பெண்கள் காலி சிலிண்டர்களை முன்னால் வைத்துக்கொண்டு, தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று அரசு ஒருபுறம் கூறினாலும், எரிவாயு நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை நிறுத்தி வைத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்களைப் பார்க்கும் நெட்டிசன்கள், சிலிண்டர் தட்டுப்பாட்டின் தீவிரத்தை உணர்ந்து கவலைப்பட்டாலும், பெண்களின் இந்த வினோதமான போராட்ட முறைகளைக் கண்டு வேடிக்கையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
