மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து கொண்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் நலமாக இருப்பதாகவும், கப்பலின் பயணம் இந்திய அரசால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய மோதல் சூழலில் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகத் தப்பித்த நான்காவது இந்தியக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இன்னும் 20-க்கும் மேற்பட்ட இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிக்கியுள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு ஈரானிய அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதோடு, தேவைப்பட்டால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அரசு தயாராக உள்ளது.
