தேனி மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்லா, தனது மனைவி அனீஸ் பாத்திமாவால் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனீஸ் பாத்திமாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம் அப்துல்லாவிற்கு தெரியவந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி, கள்ளக்காதலனின் தூண்டுதலின் பேரில் தினமும் உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைச் சிறிதளவு கலந்து கொடுத்து வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அப்துல்லா உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் அனீஸ் பாத்திமா காதலனுடன் தலைமறைவானது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அப்துல்லாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது தடய அறிவியல் சோதனையில் உறுதியானது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் அனீஸ் பாத்திமா மற்றும் அவரது காதலன் ஜெயபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அனீஸ் பாத்திமா மற்றும் ஜெயபாண்டி ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.