2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது ஒரு முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இழுபறிகளுக்குப் பிறகு, மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே இணைய அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தனது கட்சியின் இறுதி முடிவை இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தென்காசித் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 5 தொகுதிகளைக் கேட்டு டிமாண்ட் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கக் கூடுதல் தொகுதிகள் அவசியம் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக அதிமுக மேலிடத்துடன் இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த வருகை, தென் தமிழகத்தில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்கும் எனக் கணிக்கப்படும் நிலையில், மற்ற கூட்டணி கட்சிகள் மத்தியிலும் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
