இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், நெதன்யாகு காயமடைந்து இடிபாடுகளுக்கு இடையே இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவை முற்றிலும் போலியானவை என்று இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் நெதன்யாகு நலமுடன் இருப்பதாகவும், பரப்பப்படும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் அலுவலகம், அவர் தனது பணிகளை வழக்கம்போல மேற்கொண்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
