மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மோதலில் நேரடியாகப் பங்கு பெறாத துபாய் நகரம் தற்போது மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

போர் தொடங்கி 16 நாட்களை எட்டியுள்ள சூழலில், துபாயை நோக்கி ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவி வருவதால், நகரின் பல பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டு வருகின்றன.

இதுவரை அமீரகத்தின் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சிலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் என்ற துபாயின் பெயர் இந்தத் தாக்குதல்களால் சிதைந்து வருவதோடு, அதன் முக்கிய வருவாய் ஆதாரங்களான சுற்றுலா மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகமும் முடங்கியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களால் வெளிநாட்டவர்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில், போரின் தாக்கம் துபாயின் பொருளாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.