ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூடப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இப்போது செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூடப்பட்டால், உலகளாவிய எரிசக்தி வர்த்தகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் சுமார் 30 சதவீதம் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு முக்கிய ஜலசந்திகளும் மூடப்படும் பட்சத்தில், ஆசியா மற்றும் ஐரோப்பா இடையேயான வர்த்தகக் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

இதனால் பயண நேரம் 10 முதல் 15 நாட்கள் வரை அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பல மில்லியன் டாலர்கள் உயரும் அபாயம் உள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் சர்வதேச சமூகம் பெரும் கவலையடைந்துள்ளது.