நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச் 15) பகல் நேரத்தில் வழக்கம்போல பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு வந்த பேச்சியம்மாள் என்ற இளம் பெண்ணை, மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய நபர் தப்பியோடாமல், நேராக காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். விசாரணையில் அவர் பேச்சியம்மாளின் கணவர் சுதாகர் என்பது தெரியவந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதன் உச்சகட்டமாகவே மனைவியை வெட்டிக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பட்டப்பகலில், பேருந்து நிலையம் போன்ற பொது இடத்தில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலைச் சம்பவம் நெல்லை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
