சர்வதேச சந்தையில் ‘கருப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய், வெறும் பெட்ரோல் மற்றும் டீசலை மட்டும் கொடுப்பதில்லை; நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல முக்கியப் பொருட்களுக்கு இதுவே அடிப்படை ஆதாரமாக உள்ளது.
கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் கப்பல்களுக்கான எரிபொருள் போன்றவை கிடைக்கின்றன.
இதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் சாலைகள் அமைக்கப் பயன்படும் பிடுமென் எனப்படும் தார் போன்றவையும் இதிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகின்றன.
உலகளவில் கச்சா எண்ணெய் வளத்தில் வெனிசுலா (303 பில்லியன் பேரல்கள்) முதலிடத்தில் இருக்க, சவுதி அரேபியா மற்றும் ஈரான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குறிப்பாக, இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
