சமீபத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தொடர்ச்சியான மூன்று முக்கிய கோப்பைகளை வென்று இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது.

இந்தத் தொடரின் லீக் போட்டிகளில் இளம் வீரர் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து மூன்று முறை ‘டக்-அவுட்’ ஆகி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். இறுதிப் போட்டிக்கு முன்பாக அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இருப்பினும், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது.

அதற்குப் பலன் அளிக்கும் வகையில், இறுதிப் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, மின்னல் வேக அரைசதம் விளாசி இந்திய அணி இமாலய ரன்களைக் குவிக்க அடித்தளம் அமைத்தார்.

அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ‘வில்லோ டாக்’ (Willow Talk) போட்காஸ்டில் பேசியதாவது,

“இந்த இந்திய அணியிடம் நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், எப்போது உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பும்ரா போன்ற ஜாம்பவான்கள் முக்கியமான தருணங்களில் தங்களது திறமையை நிரூபிக்கிறார்கள்.

நான் அபிஷேக் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன். தொடர் முழுவதும் அவர் மீதான விமர்சனங்கள் இருந்தன. ஆனால், நெருக்கடியான நேரங்களில் தீயைப் போலத் துணிச்சலாகக் களமிறங்கி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வீரர்கள்தான் அணிக்குத் தேவை. அதைத்தான் அபிஷேக் சர்மா இறுதிப் போட்டியில் செய்து காட்டினார் என்று கூறினார்.