‘தி ஹண்ட்ரட்’ (The Hundred 2026) ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது, ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணியால் தேர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பெயரில் 2011-ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட பழைய பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘தி ஹண்ட்ரட்’ தொடரில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது தேர்வு செய்யப்பட்டது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ மற்றும் ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணிகளுக்கு இடையிலான உரிமையாளர் தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பு ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் தான், சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து 2011-இல் வெளியானதாகக் கூறப்படும் பதிவு, விவாதத்தின் மையமாகியுள்ளது. அதில், “ஐபிஎல் தொடரில் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர்கள் விளையாடும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து சமூக வலைதளப் பயனர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். அதில், “2013-ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே கணக்கு அதிகாரப்பூர்வமானதாக இல்லை. அது ஒரு ரசிகர் பக்கமாகவே  இருந்தது. பின்னரே சிஎஸ்கே அதனைத் தன்வசப்படுத்தி அதிகாரப்பூர்வ கணக்காக மாற்றியது. எனவே, அந்தப் பதிவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான அரசியல் பதற்றங்கள் காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்குத் தடை நீடிக்கிறது. இது குறித்த விவாதங்கள் அவ்வப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் ‘தி ஹண்ட்ரட்’ ஏலத்தில் வீரர் தேர்வு விவகாரமும், சமூக வலைதளங்களில் பழைய பதிவுகள் மீண்டும் வைரலாவதும், உலகளாவிய கிரிக்கெட் தொடர்கள் அரசியல் மற்றும் ரசிகர்களின் உணர்வுகளோடு எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதையே காட்டுகிறது.