சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அந்தோணி ராபின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு எரிவாயு கிடங்கில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான அம்மு என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அம்முவுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்தோணி ராபின் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த அந்தோணி ராபின் மீது அம்மு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடல் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் தெருவில் ஓடியபோதும், அம்மு விடாமல் துரத்திச் சென்று மீண்டும் அவர் மீது பெட்ரோல் ஊற்றிய அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அந்தோணி ராபின், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், இந்த கொலைக்கு காரணமான மனைவி அம்மு மற்றும் அவரது அக்கா கணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் பிடிவாதமாக இருந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.