தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாகவும், நட்சத்திரப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர் காளியம்மாள். கடந்த சில காலங்களாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.

இந்நிலையில், காளியம்மாள் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவர் முறைப்படி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், பெண் நிர்வாகியாகவும் சிறந்த பேச்சாளராகவும் அறியப்படும் காளியம்மாளின் இந்த முடிவு, தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.