சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக ஆகாஷ் அளித்த வாக்குமூலங்கள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது கடந்த மார்ச் 5-ஆம் தேதி அழகர் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில், ஆகாஷ் உள்ளிட்ட 5 பேரை மார்ச் 6-ஆம் தேதி மானாமதுரை போலீஸார் கைது செய்தனர். காவல் விசாரணையின் போது ஆகாஷின் கால் உடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இது போலீசாரின் அடி-உதை மற்றும் சித்திரவதையால்தான் நிகழ்ந்தது என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்தச் சூழலில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக போலீஸார் அளித்த ‘ரிமாண்ட்’ (Remand) அறிக்கையில் ஆகாஷ் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

“எனது காலின் கெண்டைக்கால் பகுதிக்கும், முட்டிக்குக் கீழேயும் கற்களை வைத்தனர். பின்னர் ஈரமான சாக்கை எனது காலின் மீது போட்டு, இரும்பு கம்பியால் வலது காலில் ஓங்கி ஒருமுறை அடித்தனர். அந்த அடியில் எனது எலும்பு முறிந்து ரத்தம் வெளியேறியது. வலியில் துடித்த என்னை, போலீசார் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேறொரு காரில் ஏற்றித் தனியாக அழைத்துச் சென்றனர். அதன்பின்னர், கண்களை அவிழ்த்துவிட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலங்கள், காவல்துறை விசாரணையின் போது கடுமையான சித்திரவதைகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை அறிய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி ஆகாஷின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் உயிரிழப்பு நேரிட்டிருப்பது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.