தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) ‘மைக்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று ஐஜேகே சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்று, அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐஜேகே இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடும் பட்சத்தில், இந்தக் குறிப்பிட்ட சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுக கூட்டணியில் ஐஜேகே-வுக்கு 5-க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இந்தச் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்களா அல்லது கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் ‘மைக்’ சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தச் சின்னம் ஐஜேகே-வுக்குக் கிடைத்திருப்பது அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.