கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் பாலியல் ரீதியான அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ள நிலையில், ‘தனக்கு 5000 காதல் உறவுகள் இருப்பதாக’ அமைச்சர் அளித்துள்ள பதில் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் கே.பி. கணேஷ் குமார். இவரது மனைவி பிந்து மேனன், கணவர் மீது பல புகார்களை முன்வைத்துள்ளார். அதாவது
“எனது கணவர் திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை கொல்லம் அருகிலுள்ள அவரது வீட்டிற்கு நான் சென்றபோது, அங்கு ஒரு பெண்ணுடன் அவர் இருப்பதை நேரில் கண்டேன். அதை ஆதாரத்திற்காகப் புகைப்படம் எடுக்க முயன்றபோது, அமைச்சரின் உதவியாளர்கள் என்னைத் தடுத்துத் தாக்கினர். இது குறித்துப் புகார் அளிக்க வந்த போலீசாரையும் அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. கடந்த 2014-இல் திருமணம் நடைபெற்றது முதலே எங்களுக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் இந்தப் புகார்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கணேஷ் குமார் கூறியதாவது, “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடும் சதியாகும். காதல் இல்லாதவர்கள் முட்டாள்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
நான் ஒரு மக்கள் பிரதிநிதியாக ஊழலற்ற முறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நெட்டிசன்கள் புரிந்துகொள்ளட்டும், கணேஷ் குமாருக்கு ஒன்று அல்ல, 5,000 காதல் உறவுகள் உள்ளன,” என்று அவர் கிண்டலாகப் பதிலளித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், “கேரளாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. ஒரு அமைச்சரே இவ்வளவு பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டிக்கத்தக்கது,” என்றார்.
மேலும் முன்னதாக, கணேஷ் குமாரின் முதல் மனைவி யாமினியும் அவர் மீது குடும்ப வன்முறை புகார்களைத் தெரிவித்து விவாகரத்து பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு திருமண சர்ச்சையில் அமைச்சர் சிக்கியிருப்பது, தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
