ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதி வரும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்துத் தடைபட்டுள்ளதால், நாட்டில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, கேஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்குவது அல்லது கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
