சர்வதேசப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, நாடு முழுவதும் ‘எஸ்மா’ (ESMA) சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தைப் பயன்படுத்தி, வணிகர்கள் அல்லது தனிநபர்கள் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, அவசியப் பொருட்கள் பராமரிப்புச் சட்டமான (Essential Services Maintenance Act – ESMA) கீழ் கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்படும்: அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினாலோ அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்தாலோ 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தடையின்றி சிலிண்டர் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலால் சிலிண்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்குத் தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.