கர்நாடக மாநிலம் துமகூரு அருகே, மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபரின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பமாக, அவர் தனது மனைவியால் காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. அதாவது தசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இவர் திடீரென உயிரிழந்தார். அவரது மனைவி ஆஷா, தனது கணவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். உறவினர்களும் அதனை நம்பி, சந்தேகமின்றி பரமேஷின் உடலை அடக்கம் செய்தனர்.

பரமேஷ் இறந்து 20 நாட்கள் கூட முடியாத நிலையில், ஆஷா தனது நண்பரான சந்திரப்பா என்பவரை அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டார். கணவர் இறந்து சில நாட்களிலேயே ஆஷா மறுமணம் செய்தது உறவினர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பரமேஷின் சகோதரிகள், இந்த மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கருதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில், புதைக்கப்பட்ட பரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் ஆஷா மற்றும் அவரது புதிய கணவர் சந்திரப்பாவிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் அதிரடி விசாரணையில், ஆஷா மற்றும் சந்திரப்பா ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆஷாவுக்கும் சந்திரப்பாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்கு கணவர் பரமேஷ் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு, ஆழமான உறக்கத்தில் இருந்த பரமேஷின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொன்றுள்ளனர். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதபடி இது மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கை மரணம் என நாடகமாடியது அம்பலமானது.

மேலும் ஒரு மாத காலமாக ‘மாரடைப்பு’ என நம்பப்பட்ட இந்தச் சம்பவம், தற்போது ஒரு பயங்கரமான கொலை வழக்காக மாறியுள்ளது. கொலையாளிகள் ஆஷா மற்றும் சந்திரப்பா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சதித்திட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.