சொந்த மண்ணில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற இரட்டை சாதனைகளை இந்தியா படைத்தது.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப், பேட்ஸ்மேன் டேரில் மிட்செலை நோக்கி பந்தை ஆக்ரோஷமாக வீசினார். அந்தப் பந்து மிட்செலின் தோள்பட்டையில் பலமாகத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மிட்செல், உடனடியாக நடுவரிடம் புகார் அளித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலையிட்டு நிலைமையைச் சீர்செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நடத்தை விதிகளின் பிரிவு 2.9-ன் படி, ஒரு வீரரை நோக்கி ஆபத்தான முறையில் பந்தை வீசுவது விளையாட்டின் உணர்விற்கு எதிரானது எனக் கருதப்படுகிறது. இது ‘நிலை 1’ (Level 1) குற்றத்தின் கீழ் வரும் என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்படி போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50% அபராதம். அதோடு அவரது கணக்கில் 1 அல்லது 2 குறைபாடு புள்ளிகள் (Demerit Points) சேர்க்கப்படலாம்.

கடந்த 24 மாதங்களில் ஒரு வீரர் 4 குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள்/டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்த பிறகு, அர்ஷ்தீப் சிங் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து டேரில் மிட்செலிடம் நேரில் மன்னிப்பு கேட்டார். மிட்செலும் அதனை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேடன் சீல்ஸ், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது இதுபோன்று பந்தை வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முன்னுதாரணம் இருப்பதால், ஐசிசி இந்தச் சம்பவத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

மேலும் இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியின் மகிழ்ச்சிக்கு மத்தியில், அர்ஷ்தீப் சிங் மீதான ஐசிசி-யின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது.