மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், தூங்கிக் கொண்டிருந்த கணவரை அவரது மனைவியே பிளேடால் அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் ஐடி ஊழியராகப் பணியாற்றும் லலித் ராஜ்புத் என்பவருக்கும், ஷாஜாபூரில் நர்ஸாகப் பணியாற்றும் தெனந்தினி தோமர் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் ஒன்றாக வாழ்ந்த நிலையில் (Live-in), லலித் திருமணம் செய்ய மறுத்ததால் தெனந்தினி அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு கடந்த 2025 மே மாதம் திருமணம் நடந்தது.

​இருப்பினும், அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தெனந்தினியைச் சந்திக்க வந்த லலித், அவரை ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். ஞாயிறு காலை லலித் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அவரது நெஞ்சில் ஏறி அமர்ந்த தெனந்தினி, பிளேடால் லலித்தின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் கிழித்துள்ளார். காயங்களுடன் பாத்ரூமிற்குள் ஓடி ஒளிந்த லலித்தை அங்கேயும் துரத்திச் சென்று கண்ணாடிக் குவளையால் தலையில் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த லலித் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான மனைவியைத் தேடி வரும் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.