மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு முகமூடி அணிந்து வந்த நான்கு பேர், மூதாட்டியின் வாயில் துணியைத் திணித்துத் தடுத்து, அடுத்தடுத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். அதோடு விடாமல், அவரை கட்டிலோடு தூக்கிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசிக் கொல்லவும் முயன்றுள்ளனர்.
அப்போது வாகனம் வரும் சத்தம் கேட்டதால், அவர்கள் பயந்து மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். சுமார் 12 மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை, மறுநாள் காலை நிலத்திற்கு வந்த கிராம மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூதாட்டியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பெண் அதிகாரியைக் கொண்டு மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
