8 வயதில், ‘ஹனுமான்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய நடிகை நித்யா மேனன், பெங்களூரில் பிறந்து கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

சினிமாவில் வழக்கமாக இருக்கும் கவர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பவர்ஃபுல் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அவர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சக நடிகைகளுக்குத் துணிச்சலான சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

சினிமாவில் பெண்கள் கவர்ச்சியாக மட்டுமே சித்தரிக்கப்படும் அவலம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் நீடித்து வருவதாக நித்யா மேனன் சாடியுள்ளார். பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக எல்லையை மீறும் அத்தகைய காட்சிகளைத் தவிர்க்க நடிகைகளே துணிச்சலுடன் “நோ” (No) சொல்ல வேண்டும் என்றும், புகழை விட எப்போதும் தன்மானமே மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட சில படங்களில் தான் நடிக்க மறுப்பதால் பல  வாய்ப்புகளைத் தொடர்ந்து இழந்து வருவதை ஒப்புக்கொண்ட நித்யா மேனன், அதைப் பற்றித் தனக்கு எவ்வித கவலையும் இல்லை என்றும், புகழுக்காகத் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார்.