புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா 5,000 ரூபாய் நிதியுதவியை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. வழக்கமாக மாதந்தோறும் வழங்கப்படும் 2,500 ரூபாய் உதவித்தொகையை, சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து முன்னதாகவே மொத்தமாக வழங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் புதுச்சேரி குடும்பத் தலைவிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பலத்தைப் பெறுவதற்காகவே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளின் பெயரில் 50,000 ரூபாய் வைப்புத் தொகை, சொத்துப் பதிவில் 50% முத்திரைத்தாள் சலுகை எனப் பெண்களுக்காகத் தனது அரசு எடுத்து வரும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து சிறப்புத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
