கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் உள்ள புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு அதிகாரிகளிடம் ஆஜராகியுள்ளனர். இந்த நிலையில் நாளை மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளதைக் காரணம் காட்டி நாளை நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் மத்திய புலனாய்வுத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குச் செல்வதற்குப் பதிலாகச் சென்னையில் உள்ள புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளதால் இந்தக் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து புலனாய்வுத் துறை எடுக்கும் முடிவைப் பொறுத்தே விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.