கோவையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதாவது மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், கோவையில் முதுகலை கல்வி பயின்று வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, அவர் தனது காதலனுடன் விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகரில் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கருப்பசாமி (30), காளீஸ்வரன் (21) மற்றும் தவசி (20) ஆகிய மூவர், மாணவியின் காதலனை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மூவரையும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகள் மூவருக்கும் ‘சாகும் வரை ஆயுள் தண்டனை’ விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சமும், தாக்குதலுக்குள்ளான அவரது காதலனுக்கு ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை குறித்து அரசு வழக்கறிஞர் பி. ஜிஷா கூறுகையில், “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்குத் தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளார். இந்த இக்கட்டான சூழலில், மாணவியின் காதலன் அவருக்குப் பெரும் துணையாக இருந்தார். கடந்த 5 ஆண்டுகளாகப் பழகி வந்த இவர்கள், இந்தச் சம்பவத்தை ஒரு கெட்ட கனவாகக் கருதி மறந்துவிட்டு, திருமணம் செய்துகொண்டு இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர். காதலனின் இந்த முதிர்ச்சியான முடிவு, மாணவி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் பெரும் உதவியாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
