தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் சார்பில் கிருஸ்டோபர் மாணிக்கம் ஆகியோரும், அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, தே.மு.தி.க சார்பில் எல்.கே.சுதீஷ் மற்றும் பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களைத் தவிர மனுத் தாக்கல் செய்திருந்த மாற்று வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தேர்தல் களம் இவர்களோடு சுருங்கியது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் கூடுதல் வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாத காரணத்தால், 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸின் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்திருந்த சௌமியா அன்புமணி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். சுயேச்சையாகப் போட்டியிட முயன்ற 7 பேரின் மனுக்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி முதல் தங்களது பதவிக்காலத்தைத் தொடங்க உள்ளனர். ஏற்கனவே பதவியில் இருக்கும் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அந்த இடங்களை நிரப்பும் வகையில் இந்தத் தேர்தல் நடைமுறைகள் மார்ச் 16-ந் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது போட்டியின்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.