மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்ததோடு, வர்த்தக ரீதியாகவும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த இறுதிப்போட்டியை ‘ஜியோ ஸ்டார்’ (JioStar) தளத்தின் மூலம் ஒரே நேரத்தில் 82.10 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர். இது இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு வரலாற்றிலேயே மிக அதிகப்படியான ‘கன்கரண்ட் வியூவர்ஷிப்’ (Concurrent Viewership) ஆகும்.
இதற்கு முன்பாக, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5.9 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை தற்போது இந்திய அணி நிகழ்த்திய இந்த வெற்றிப் போட்டி தகர்த்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், 2024-ஆம் ஆண்டில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து சுமார் ரூ. 70,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட கூட்டு முயற்சியைத் தொடங்கியது. இதற்காக சுமார் ரூ. 11,000 கோடியை முதலீடு செய்திருந்தார் அம்பானி.
ஜியோ ஸ்டார் தளம், 2027-ஆம் ஆண்டு வரை ஐசிசி (ICC) நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது. இதற்காக சுமார் ரூ. 25,000 கோடியை இந்நிறுவனம் செலவிட்டுள்ளது. தற்போது இந்த முதலீட்டிற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து வருவதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உலகக்கோப்பைத் தொடரின் மூலம் மட்டும் ஜியோ ஸ்டார் நிறுவனம் விளம்பரங்கள் வாயிலாக ரூ. 2,000 கோடிக்கும் மேலாக வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமுல், மஹிந்திரா, ஹூண்டாய், பிர்லா ஓபஸ், ராபிடோ மற்றும் ஓபன் ஏஐ (OpenAI) போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தத் தொடரில் விளம்பரதாரர்களாக இணைந்துள்ளன. மேலும் இந்திய அணியின் வெற்றி மற்றும் டி20 உலகக்கோப்பை ஒளிபரப்பு சாதனை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த மாபெரும் கூட்டு முயற்சிக்குத் தகுந்த பலனைப் பெற்றுத் தந்துள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
