இந்திய அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் (PCB) பெரும் குழப்பம் நிலவுகிறது. அந்நாட்டின் இளம் நட்சத்திர வீரர் ஷாஜேப் பட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் மனமுடைந்து, தனது 24-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘காயித்-இ-ஆசம்’ (Quaid-e-Azam) கோப்பைத் தொடரில் வெற்றி பெற்ற அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தவர் ஷாஜேப் பட்டி. இருப்பினும், அதன் பிறகு அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “கடந்த ஆண்டு நேரலையில் கோப்பையை வென்ற அணியில் நான் இருந்தேன்.
I AM LEAVING PAKISTAN CRICKET FOREVER 💔 pic.twitter.com/RoPcd3Gd1H
— Shahzaib Bhatti (@shahzaibcric) March 8, 2026
ஆனால், அதன்பிறகு தொடர்ந்து 40 போட்டிகளில் நான் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டேன். திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அரசியல் மற்றும் பாரபட்சமான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்த அமைப்பில் என்னால் பயணிக்க முடியாது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் மற்றும் ஊழல் காரணமாகத் தன்னைப் போன்ற பல திறமையான இளம் வீரர்களின் எதிர்காலம் சிதைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “இதனால்தான் பல வீரர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி, பிற நாடுகளில் விளையாட முற்படுகிறார்கள். எனது கனவு சிதைக்கப்பட்டதற்குக் காரணம் பிசிபி-யின் இந்தச் சீர்கேடான நிர்வாகம் தான்” என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இளம் வீரரின் இந்தப் பகிரங்கமான குற்றச்சாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது குறித்த செய்திகள் பாகிஸ்தானிலும் எதிரொலித்து வருகின்றன. அதிகாரப்பூர்வமாக அங்கு அமைதி நிலவினாலும், பாகிஸ்தானின் தெருக்களில் இந்திய வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் குறித்துப் பேசப்படுவதாகவும், ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை ரகசியமாகக் கொண்டாடி வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு நிர்வாகச் சீர்கேடுகளே காரணம் என்று அந்நாட்டு ரசிகர்களே விமர்சித்து வரும் சூழலில், இளம் வீரர் ஷாஜேப் பட்டியின் இந்த ஓய்வு முடிவு, பிசிபி நிர்வாகத்திற்குப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
