அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் இந்த வெற்றி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீரின் தவறான கணிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் நகைப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே, “இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெறும்” என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது. அமீரின் இந்தக் கணிப்பைப் பார்த்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் சமூக வலைதளத்தில் இது குறித்துப் பதிவிட்ட கைஃப், “உலகின் தலைசிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணியை வீழ்த்திவிடுவார்கள் என அமீர் எதை வைத்துச் சொன்னார் என்று புரியவில்லை. 2024-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற அதே பலமான அணியாகவே இந்திய அணி தற்போது திகழ்கிறது. இவ்வளவு வலிமையான அணியை குறைத்து மதிப்பிட்டது எந்த வகையில் நியாயம்?” என்று சாடியுள்ளார்.