ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கக்கூடிய உயரிய வேலையைச் சேருவதற்கு முன்னரே இந்திய இளைஞர் ஒருவர் துறந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புஷ்கர் என்ற அந்த இளைஞர் இணையதள வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

அவருக்கு ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. மாதத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் ஊதியம் பெறக்கூடிய அந்த வேலையில் சேருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் திடீரென அவர் அந்த வேலையை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்கு இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயம் என்ற நிலையில் இவ்வளவு பெரிய தொகையை மறுப்பது கடினமான முடிவுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும் தனக்குப் பிடிக்காத வேலையில் சிக்கிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவதை விட தனக்கு விருப்பமான சுதந்திரமான பணியைச் செய்வதே சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நிலையான வருமானம் இல்லாத போதிலும் சுயதொழில் செய்பவராகத் தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.

இந்த முடிவு எதிர்காலத்தில் தனக்குச் சாதகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புஷ்கரின் இந்தத் துணிச்சலான முடிவிற்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன. சிலர் அவரது சுதந்திரமான சிந்தனையைப் பாராட்டி வரும் நிலையில் மற்றவர்கள் இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டது தவறு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதுவாக இருப்பினும் ஒருவரின் முன்னுரிமை மற்றும் விருப்பமே அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.