மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதோடு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததை ஈரான் உறுதி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்துள்ளது.

கடல் மட்டத்திற்கு அடியிலிருந்து ஏவப்பட்ட குண்டுகளால் ஈரானியக் கப்பல் பல துண்டுகளாக உடைந்து தீப்பற்றி எரிந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு மந்திரி அராக்சி எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி சர்வதேச நீர் எல்லைகளில் அமெரிக்கா அராஜகமாக நடந்து கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும் ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் இதற்கு முரணாக அமைந்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது தந்தையிடம் பேசியபோது தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்கப் படைகள் இரண்டு முறை எச்சரிக்கை விடுத்ததாகவும் கப்பலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கப்பலின் கேப்டன் ஊழியர்களை வெளியேற அனுமதிக்காததால் அவருக்கும் சக அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலேயே அந்நாட்டுச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.