இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்றும், சஞ்சுவின் திறமையை அங்கீகரிக்க கம்பீர் மறுக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், கம்பீர் குறித்து சஞ்சு சாம்சன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. முன்னாள் வீர்ர்அஸ்வினுக்கு கொடுத்த பிட்டியில் தனது ஆட்டம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ள சஞ்சு சாம்சன், ஒரு போட்டியில் சரியாக விளையாடாதது குறித்து கௌதம் கம்பீர் தன்னிடம் காட்டிய நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது “ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற வருத்தத்தில் நான் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம் வந்த கௌதம் கம்பீர், ஏன் வருத்தமாக இருக்கிறாய் என்று கேட்டார். கிடைத்த அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டேனே என்று நான் அவரிடம் கூறினேன்.


இதற்கு கம்பீர் அளித்த பதில் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக சஞ்சு தெரிவித்துள்ளார். “அதற்கு அவர் (கம்பீர்), ‘அதனால் என்ன? நீ 21 முறை டக் அவுட் ஆனாலும் சரி, 22-வது முறையும் உன்னை நான் அணியில் எடுப்பேன். உன் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார்,” என சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினாலும் அவரைப் பாராட்ட கம்பீருக்கு மனம் இல்லை என்றும், வேண்டுமென்றே அவரைப் புறக்கணிக்கிறார் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தனர். ஆனால், சஞ்சு சாம்சனின் இந்த வெளிப்படையான பேட்டி, கம்பீர் அவர் மீது எவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
மேலும் தற்போது சஞ்சு சாம்சனின் இந்த வைரல் பேட்டி, கம்பீரின் மீது இருந்த எதிர்மறை விமர்சனங்களை மாற்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.