மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தால் ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆவியாகின.

வாரத்தின் தொடக்க நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே விற்பனை அழுத்தம் அதிகமாக இருந்தது. சென்செக்ஸ் (Sensex): மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2,371 புள்ளிகள் சரிந்து, 76,558 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 720 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்து, 24,731 புள்ளிகளில் நிலைபெற்றது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா மட்டுமல்லாது, ஆசியாவின் முக்கியப் பங்குச்சந்தைகளான: ஜப்பான் (Nikkei) தென் கொரியா (Kospi) உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் சந்தைகளும் கடும் சரிவுடனேயே வர்த்தகமாகின.

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற அச்சம், நிலையற்ற சூழல் நிலவுவதால், அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர்.  மேலும் பங்குச்சந்தையின் இந்த அதிரடி வீழ்ச்சியால் சிறு முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நிலைமை சீரடைய சர்வதேச அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.