அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், ஒரு விளையாட்டான குறும்புச் செயல் விபரீதத்தில் முடிந்து, பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 5, வியாழக்கிழமை நள்ளிரவு, கெய்னெஸ்வில்லி பகுதியில் உள்ள கணித ஆசிரியர் ஜேசன் ஹியூஸின் வீட்டின் மீது ஒரு கும்பல் கழிப்பறை காகிதங்களை வீசி குறும்பு செய்துள்ளது.

வெளியே சத்தம் கேட்பதைக் கண்டு அவர்கள் யாரென்று பார்க்க ஹியூஸ் வந்தபோது, அங்கிருந்த ஐந்து இளைஞர்கள் காரில் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஹியூஸ் எதிர்பாராதவிதமாகத் தடுமாறி சாலையில் விழ, ஜேடன் வாலஸ் என்ற 18 வயது இளைஞன் ஓட்டிய டிரக் அவர் மீது ஏறியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 40 வயதான ஹியூஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். தப்பியோட முயன்ற இளைஞர்கள் ஹியூஸ் விழுந்ததைக் கண்டு உடனே நிறுத்தி அவருக்கு முதலுதவி செய்துள்ளனர்.

இருப்பினும், உயிரிழப்பு ஏற்பட்டதால் டிரக்கை ஓட்டிய ஜேடன் வாலஸ் மீது வாகனத்தின் மூலம் கொலை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த மற்ற நான்கு இளைஞர்களும் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஹியூஸுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.