கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள், சாலையில் காட்டிய அபாரமான ஒழுக்கம் தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் போது, ஒரு குழுவாகச் சாலையில் சிதறி நடக்காமல், மிக நேர்த்தியாக ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செல்கின்றனர்.

சாலையில் சென்ற நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மாணவர்கள் ஒருவர் தோள் மீது மற்றொருவர் கை வைத்துக்கொண்டு, எவ்வித ஆரவாரமும் இன்றிச் சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக நடந்து செல்வது பார்ப்போரைக் நெகிழச் செய்துள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, மாணவர்களின் இந்தச் சீரிய ஒழுக்கத்திற்குப் பின்னால் ஆசிரியர் மிருதுளா தேவி என்பவரின் அர்ப்பணிப்பு இருப்பது தெரியவந்தது. “சாலையில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டுமென்றால் வரிசையாகச் செல்ல வேண்டும்; அப்போதுதான் வாகனங்கள் உங்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும்” என மாணவர்களுக்கு அவர் மிக எளிமையாகப் புரிய வைத்துள்ளார்.

“>

 

தற்செயலாக இந்த வீடியோவை எடுத்த நபரும் அதே ஆசிரியரிடம் பயின்ற மாணவர் என்பது கூடுதல் சிறப்பு. தனது குருவின் பாடம் இன்றும் மாறாமல் தொடர்வதைக் கண்டு பெருமிதத்துடன் அவர் பதிவிட்ட இந்த வீடியோ, “ஒழுக்கம் என்பது வகுப்பறையோடு முடிந்துவிடுவதல்ல, அது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் இருக்க வேண்டும்” என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.