சமூகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பதற்கு வலதுசாரி அரசியலே முதன்மைக் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இது குறித்து மேலும் கூறியதாவது, “வலதுசாரி அரசியல் என்பது பழமைவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டது. மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு எனப் பிரித்து, அது இறைவனின் விருப்பம் என மக்களை நம்பவைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வலதுசாரி சக்திகள் தற்போது வலுப்பெற்று வருவதையே சமீபத்திய ஆணவக் கொலைகள் உணர்த்துகின்றன. சமூக மாற்றத்தை விரும்பாதவர்களே வலதுசாரிகள். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலான அண்ணல் அம்பேத்கரைத் தலைவர் இல்லை என அவமதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். அத்தகைய சமூக விரோத சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு, அவர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

மேலும் நமது வாழ்வு சாதிய அடையாளங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டு, அதிலிருந்து மீள முடியாதபடி சிக்கியுள்ளது. இந்தச் சாதியக் கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றால், மனுதர்மக் கொள்கைகளையும், சனாதனக் கோட்பாடுகளையும் வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்,” என்று அவர் பேசினார்.