தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், வரும் 11-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். திருச்சியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்தத் தேர்தல், முதல்வா் மு.க. ஸ்டாலினுக்குத் தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும், அவருக்குத் தோல்வி உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றாா். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் எல்.முருகன், “இலவசங்கள் வழங்கக் கூடாது என்று கூறிய விஜய், தற்போது அதே இலவசங்களை அறிவித்திருக்கிறாா்.
அரசியலுக்குப் புதிதாக வந்திருக்கும் அவா், இதுவரை எதையும் செயல்படுத்திக் காட்டியதில்லை. அவரது அறிவிப்புகள் மக்களிடத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியே. சினிமா நடிகா்களைப் பார்க்க வரும் கூட்டத்திற்கும், அரசியல் கட்சிக்கான வாக்காளா்களுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.மேலும் நடிகரைப் பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டு போடும் காலம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது,” என்று கடுமையாக விமர்சித்தாா்.
