தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்குப் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சினிமாவில் தீபாவளி, பொங்கல் சிறப்புத் திரைப்படங்கள் வெளியாவதைப் போல விஜய் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி இவ்வளவு பெரிய வாக்குறுதிகளை அளிப்பது, அவர்கள் ஆட்சிக்கு வருவார்களா என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். மேலும், விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது என்றும், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதே சமயம், பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், இன்று ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருப்பதை அரசியல் கட்சிகளின் இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன என்றும், பெண்களுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகள் அளிக்கப்படுவதை தான் வரவேற்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.
